வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படுமா?
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாஞ்சிக்கோட்டை,
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வீடுகளுக்கு புகும் தண்ணீர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பல்வேறு பகுதியில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல விளார் சாலையில் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நின்றது.
கொஞ்சம் அதிக மழை பெய்தாலே விளார் சாலை பகுதியில் உள்ள பல்வேறு நகரில் இருக்குமு் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடும் நிலை உள்ளது என அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதர் மண்டி கிடக்கிறது
மழை நீர் வெளியேற ஏதுவாக நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பால்பண்ணை அருகே வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. பின்னர் வடிகாலை தூர்வாரப்படாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் தற்போது இந்த வடிகால் வாய்க்காலில் கருவேல மரங்கள், காட்டாமணக்கு செடிகள் மற்றும் முள் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
இதனால் மழை நீர் வடிவதற்கு தடை ஏற்படுகிறது. மேலும் ஆங்காங்கே வசிப்பவர்கள் வடிகால் வாய்க்காலில் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை கொட்டி விடுகின்றனர்.இதனால் மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் தேங்கி விடுகின்றன.
தூர்வார வேண்டும்
மேலும் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன.
எனவே வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.