இலவசங்கள் அவசியமா?பொதுமக்கள் கருத்து


இலவசங்கள் அவசியமா?பொதுமக்கள் கருத்து
x

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

வேலூர்

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூட காண முடிந்தது.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.

இருந்தாலும் 'மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது' என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடியும், தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதுபற்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

கல்வி, மருத்துவத்துக்கு வழங்கலாம்

பொருளாதார உதவி பேராசிரியர் மோசஸ்(வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரி):- இல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதே இலவசம். ஆனால் இந்த இலவச திட்டங்கள் இல்லாதவர்களுக்குதான் சென்றடைகிறதா? என்பதை ஆராய வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வருமான வரி செலுத்துபவர்களும் கூட சில நேரங்களில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே கல்விக்கு வழங்கப்படும் சீருடை, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் வரவேற்கத்தக்கது. மேலும் மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளிய மக்கள் பலர் சிகிச்சை பெற்று உயிர் பெற்றுள்ளனர்.

அரசின் பல இலவச திட்டங்களில் தகுதி அற்றவர்களும் பயனடைந்து வருகின்றனர். அதை கண்காணிக்க வேண்டும். இலவசமாக பொருட்கள் அளிப்பதற்கு பதில் அந்தப் பொருட்களை அவர்களே வாங்கி கொள்ளும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களும் கொண்டு வர வேண்டும்.

வேலூரை சேர்ந்த வணிகர் அருண்பிரசாத்:- தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் இலவசங்களை வாக்குறுதியாக அளிக்கின்றனர். இலவசங்களைப் பெற்று மக்கள் பழகி விட்டனர். மக்களும் அதை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தன் ஊதியத்தில் பெரும்பாலான தொகையை பிள்ளைகளின் கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் மட்டுமே செலவிடுகிறார். அந்த இரண்டையும் இலவசமாக வழங்கலாம். அவ்வாறு வழங்கினால் அவரது ஊதியத்தின் பெரும்பாலான தொகை சேமிக்கப்படும். அவரும் முறையாக வரி செலுத்தும் நிலை ஏற்படும். தனது குடும்பத்துக்கு தேவையானதை அவரே வாங்கிக் கொள்வார். நாளடைவில் படிப்படியாக இலவசத்தையும் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்.

தனிப்பட்ட விருப்பம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மேலாளர் என்.பாலாஜி:- வசதி படைத்தவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே வாங்கி கொள்கிறார்கள்.‌ ஆனால் ஏழை எளிய மக்கள், வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். தங்கள் சக்திக்கு மீறிய பொருட்களை பார்க்க தான் முடிகிறது. ஆனால் வாங்க முடியவில்லை என்ற ஏக்கம் ஏழைகள் மனதில் இருக்கிறது.

அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், விலையில்லா பொருட்கள் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். சலுகைகள், விலையில்லா பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வருமான வரி அரசுக்கு கட்டும் அளவிற்கு வசதி உடையவர்கள், தங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், விலையில்லா பொருட்கள் அவசியம் தானா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.‌ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

அரக்கோணம் தணிகை போளூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சசி மோகன்:- இலவசத் திட்டங்கள் உண்மையாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் போய் சேர்வதில்லை. இலவசமாக கொடுப்பதாலேயே தரம் குறைந்தவையாக அமைந்து விடுகிறது. பாவம் ஏழை மக்களுக்கு இது புரிவதில்லை. புரிந்தாலும், இலவசம் என்பதால் பொது மக்களும் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கண்டறிந்து வழங்கப்பட்டால் ஒழிய, இலவசமாக வழங்குவது பயன் இல்லை. அது அரசுக்கு வீண்செலவு என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் ஐ.கே.சிவக்குமார்(கேட்டரிங் சமையல் கலைஞர்):- இலவசம் என்பது தவறுதான். அரசு பொறுப்பு ஏற்பவர்கள் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, வேளாண்மை வளர்ச்சி ஆகியவற்றை வழங்கினாலே நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளால் சொல்லப்படுகிற இலவச அறிவிப்பு களால்தான் மக்கள் ஏமாறுகிறார்கள். ஓட்டுக்காக வழங்கும் இலவசங்களை அனுமதிக்கக்கூடாது என்றார்.

வாணாபுரத்தை சேர்ந்த குடும்ப தலைவி சுதா:- இலவசங்கள் தேவையில்லை. படித்த இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் வேலை இன்றி தவித்து வருவது மட்டுமல்லாமல் குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். எனவே இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளை மேம்படுத்துவதற்கு திட்டங்களை வழி வகுக்க வேண்டும் என்றார்.

ஆரணி அருந்ததிபாளையம் செல்வராஜ்(செருப்பு தைக்கும் தொழிலாளி):- தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிவிப்புகளாக அரசியல் கட்சியினரால் அறிவிக்கப்படுபவை மக்களை திருப்திப்படுத்தவே. நேரடியாக மக்களை சென்றடைய கூடிய வேலை வாய்ப்புகளை செய்து கொடுத்தாலே எங்களுடைய பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம். அன்று ஒரு நாள் கொடுக்கப்படுகிற அறிவிப்பும், சலுகையும் வாழ்நாள் முழுமையாக கிடைத்துவிடுமா? இலவசங்கள் என்பது வெறும் கண்துடைப்பே, அவரவர் உழைப்பால் வருகிற பணமே அவர்களை காக்கும்.

தேவையானவர்களுக்கு வழங்கலாம்

ஜேக்கப் ஸ்டான்லி இன்பராஜ்(திருப்பத்தூர் தனியார் கல்லூரி, பொருளியல் துறைத்தலைவர்):- அரசு வழங்கும் இலவசங்கள் தேவையற்றது. ஏனென்றால் இலவசங்கள் மக்களிடம் சோம்பேறித்தனத்தை உருவாக்குகிறது. எல்லாத்துக்கும் அரசையே நாடுவார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள், முயற்சிகள் அடிபடுகிறது. அவர்களின் ஆய்வு திறன்கள், புதிய நோக்கங்கள் தடைபடுகிறது. இலவசங்களால் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் வந்து விடுகிறார்கள். அரசு நல்ல நோக்கத்திற்காக இலவசங்களை கொடுத்தாலும் அது மக்களை சென்று அடைகிறதா? என்பது தெரியவில்லை. புதிய, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் போது இலவச பொருட்களை அவங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம். அல்லது கம்பெனியில் வேலை பார்க்கும் போது நிறைய பொருட்களை உற்பத்தி செய்து எதிர்காலத்தில் பெரிய வேலை வாய்ப்புகளை கொடுக்கிற ஆட்களாக உருவாக முடியும். அந்த மாதிரி காரியங்களை அரசு செய்தால் நன்றாக இருக்கும். இலவசங்கள் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு வழங்கலாம். ஆனால் அதனை ஒழுங்குப்படுத்தி அவர்களுக்கு போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

திருப்பத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி பாலாஜி:- அரசு கொடுக்கும் இலவசங்கள் தேவையில்லை. அரசு பள்ளிமாணவ-மாணவிகளுக்கு மட்டும் விலை இல்லா சைக்கிள், நோட்டுப் புத்தகம் மற்றும் கல்வி கட்டணம் போன்றவற்றை அளிக்கலாம். இதனால் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அவர்கள் மூலம் அந்த குடும்பம் பயன்பெறும். இலவசங்களை தவிர்த்து தொழிற்சாலைகளை அரசு ஆரம்பித்து படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை அளிக்கலாம். இலவசத்தால் எந்த பயனும் இல்லை. இதனால் மக்கள் வரிப் பணம் தான் வீணாகிறது. அரசுக்கு பெரும்பான்மையான பணம் சேமிக்கப்பட்டு நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story