கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் பயன்படுத்தப்படுகிறதா?
நாகர்கோவிலில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் ஒலி மாசு தடுப்பு குறித்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒலி மாசு குறித்த ஆய்வு பணி நாகர்கோவில் ஒழுகினசேரியில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பங்கேற்று வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலி அளவை ஆய்வு செய்தார். இதற்காக அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களிலும் அதிக ஒலி ஒழுப்பும் ஒலிப்பான் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலைகள் மறு சீரமைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பசுமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒலி மூலம் மாசு
இந்தநிலையில் தற்போது ஒலி மூலம் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பும் கருவி குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு கருவியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி எழுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதுதொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படும் போது மாநகர பகுதியில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபராதம்
முன்னதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட 5 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, உதவி இயக்குனர் (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) தேவதாஸ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கவின் உள்பட பலர் உடன் இருந்தனர்.