கள்ளக்குறிச்சி பள்ளியில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? ஐகோர்ட்டு கேள்வி


கள்ளக்குறிச்சி பள்ளியில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? ஐகோர்ட்டு கேள்வி
x

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது, பள்ளி வளாகத்தையும், அங்கிருந்த வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். தீ வைத்து எரித்தனர்.

இதையடுத்து, பள்ளி வளாகம் மூடப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியைத் திறக்கக்கோரி பள்ளித் தாளாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த மாதம் 5-ந்தேதி முதல் ஒருமாத காலத்துக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளியைத் திறக்க அனுமதியளித்தது.

என்ன உத்தரவாதம்?

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகளைத் தொடங்கியபிறகு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், ஆனால் மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதற்கு நீதிபதி, இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? இதுதொடர்பாக உளவியல் ஆலோசகர்கள் யாரேனும் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக பிரமாண மனு தாக்கல் செய்வதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு

பள்ளி திறக்கப்பட்ட பின்பு உள்ள நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி நிர்வாகம் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story