வழக்கில் சிக்கிய அறநிலையத்துறை ஊழியர்கள் பணியில் தொடர்கிறார்களா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி


வழக்கில் சிக்கிய அறநிலையத்துறை ஊழியர்கள் பணியில் தொடர்கிறார்களா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

வழக்கில் சிக்கிய அறநிலையத்துறை ஊழியர்கள் பணியில் தொடர்கிறார்களா என ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது. இணை கமிஷனரின் கட்டுப்பாட்டின்கீழ் பல அலுவலர்கள், அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் கோவில்களின் நிதியில் முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குபதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலர், தற்போதும் பணியில் உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும், பலன் இல்லை. எனவே உரிய நபர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரிக்க எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story