இறைச்சி, குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமானதா?


இறைச்சி, குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமானதா?
x
தினத்தந்தி 8 Oct 2022 1:15 AM IST (Updated: 8 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஓட்டல், கடைகளில் விற்கப்படும் இறைச்சி, குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமானதா என்ற சந்தேகத்துக்கு நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்கள் தீர்வு கண்டனர்.

திண்டுக்கல்

நடமாடும் பரிசோதனை கூடம்


இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம், தமிழகத்துக்கு 2 நடமாடும் உணவு பரிசோதனை கூடங்களை வழங்கியது. வேனில் அமைக்கப்பட்ட நடமாடும் உணவு பரிசோதனை கூடம் மாநிலம் முழுவதும் செல்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் வந்துள்ளது. அதன்மூலம் ஒரு மாதம், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள், வணிகர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை பரிசோதனை செய்து உடனுக்குடன் அறிக்கை வழங்கப்படுகிறது.


அதன்படி நேற்று திண்டுக்கல்-திருச்சி புறவழிச்சாலையில் செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் நடமாடும் உணவு பரிசோதனை கூடம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சந்திரமோகன் ஆகியோர் உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினர்.


உணவு பொருட்கள்


அப்போது ஓட்டலில் தயாரித்த சிக்கன்-65 மற்றும் கறிக்குழம்பு, சமையல் எண்ணெய், பாதாம் பால், மாம்பழ ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள், பருப்பு வகைகள், டீத்தூள் உள்பட 20-க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்தனர். இதையடுத்து நடமாடும் உணவு பரிசோதனை கூடத்தில் அந்த உணவு பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டன. ஒரு மணி நேரத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து அறிக்கை வழங்கப்பட்டது.


இதுகுறித்து வணிகர்கள், பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-


லிங்கேஸ்வரன் (வணிகர்):- எங்களுடைய கடையில் விற்கப்படும் பாதாம் பால், மாம்பழ ஜூஸ் ஆகியவற்றை பரிசோதனை செய்தேன். தரமாக இருப்பதாக அறிக்கை வந்தது. இதன்மூலம் போலி உணவு பொருட்களை கண்டறிந்து, அதை விற்காமல் தவிர்க்கலாம். பொதுமக்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும். எங்கள் மீதும் நம்பிக்கை ஏற்படும்.


விஜயராகவன் (ஓட்டல் மேலாளர்):- எங்கள் ஓட்டலில் தயாரான சிக்கன்-65, கறிக்குழம்பின் தரத்தை அறிய பரிசோதனை செய்தேன். அவை நன்றாக இருப்பதாக அறிக்கை கிடைத்தது. ஒரு சில நேரம் உணவின் தரம் குறித்து தேவையற்ற சர்ச்சை ஏற்படுகிறது. இதுபோன்ற நடமாடும் உணவு பரிசோதனை கூடம் இருந்தால் உடனுக்குடன் பரிசோதித்து முடிவை தெரிந்து கொள்ளலாம். அதன்மூலம் வணிகர்கள், பொதுமக்களின் சந்தேகம் தீர்ந்துவிடும்.


சந்தேகத்தை தீர்க்க...


செல்வகணேஷ் (டீக்கடைக்காரர்):- எனது டீக்கடைக்கு கம்பெனி டீத்தூள் தான் வாங்குகிறேன். எனினும் அது கம்பெனி டீத்தூளா அல்லது போலியா? என்பதை கண்டறிய பரிசோதனை செய்தேன். தரமான டீத்தூள் என்று முடிவு வந்ததும் நிம்மதியாக இருக்கிறது. வணிகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சில நேரம் உணவு பொருட்களின் மீது சந்தேகம் ஏற்படும். அதை தீர்த்து கொள்வதற்கு நடமாடும் பரிசோதனை கூடம் உதவியாக இருக்கிறது. திண்டுக்கல்லில் 3 இடங்களில் பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும்.


சூர்யா (கார் டிரைவர்):- இன்றைய காலகட்டத்தில் உணவு பொருட்களின் மீது நம்பிக்கை தன்மை குறைந்துவிட்டது. எனவே பொதுமக்கள் உணவு பொருட்களை பரிசோதனை செய்து வாங்குவதே சிறந்தது. அதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும். இதற்கு உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கை உதவியாக இருக்கிறது. இதுபோன்ற பரிசோதனை கூடம் முக்கிய இடங்களில் அமைக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story