மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களுக்கு விதிகள் உள்ளதா?
பள்ளி வாகனங்களுக்கு உள்ளது ேபால் மாணவர்களை அழைத்துச்செல்லும் ஆட்டோக்களுக்கு என விதிகள் உள்ளதா? என்றும், வழிகாட்டுதல்களை பள்ளிகள் முறையாக கடைபிடிக்காதது ஏன்? எனவும் மதுரை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
பள்ளி வாகனங்களுக்கு உள்ளது ேபால் மாணவர்களை அழைத்துச்செல்லும் ஆட்டோக்களுக்கு என விதிகள் உள்ளதா? என்றும், வழிகாட்டுதல்களை பள்ளிகள் முறையாக கடைபிடிக்காதது ஏன்? எனவும் மதுரை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
ஆபத்தான பயணம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மாணவர்களின் நலன் கருதி, பள்ளி பஸ்களில் மஞ்சள் நிற பெயிண்ட் அடிப்பது, அந்த பஸ்களில் பள்ளியின் பெயரை தெளிவாக எழுதுவது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, ஒவ்வொரு பஸ்சிலும் டிரைவருடன் உதவியாளர் பணியாற்றுவது, மாணவிகளுடன் பெண் உதவியாளர்கள் பயணிப்பது என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை சிறப்பு சட்டமாக 2012-ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த வழிகாட்டுதல்களை பல்வேறு தனியார் பள்ளிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை. தங்களது மாணவர்களை அழைத்து செல்வதற்கு தனியாக பஸ் வசதி செய்வது இல்லை. முறையான, பாதுகாப்பான வாகன வசதிகளையும் செய்வதில்லை.
பல்வேறு பள்ளிகளுக்கு ஆட்டோக்களில்தான் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இது, மிக ஆபத்தான பயணமாக உள்ளது. எனவே தமிழக அரசின் மோட்டார் வாகன சிறப்பு சட்டத்தை கடுமையாக பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அடிக்கடி விபத்து
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் சி.டி.பெருமாள் ஆஜராகி, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் போதுமான பஸ் வசதி இல்லாததால், மாணவர்களை ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். ஒரு ஆட்டோவில் குறைந்தது 10 மாணவர்களை ஏற்றிச்செல்வதால் ஆபத்தான பயணமாகி அடிக்கடி விபத்து நடக்கிறது. சமீபத்தில் கூட பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியது, என்றார்.
ஆட்டோகளுக்கு விதிமுறை உள்ளதா?
இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே பள்ளி மாணவர்கள் போக்குவரத்து தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் ஐகோர்ட்டும், அரசும் ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறு இருக்கும்போது, எதன் அடிப்படையில் குழந்தைகளை ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்புகின்றனர்? இதனை பள்ளிகள் எப்படி ஏற்கின்றன?
பள்ளி வாகனங்களுக்கு என விதிமுறைகள் உள்ளன. மாணவர்களை ஏற்றிச்செல்ல ஆட்டோக்களுக்கு என்று என்ன விதிமுறை உள்ளது? அரசு பள்ளி, தனியார் பள்ளி என அனைத்திலும் மாணவர்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.