விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா?
ஒன்றைச் சொல்லிவிட்டு, ‘‘விளையாட்டுக்குச் சொன்னேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!’’ என்று சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருக்கலாம். இங்கே விளையாட்டு என்ற சொல் ‘பொருட்படுத்தத் தேவையில்லை' என்ற பொருளில் வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் விளையாட்டை அவ்வாறே பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு செயலாகவே ஒதுக்கி விடுகிறார்கள். காரணம், அவர்களின் விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
சாதிக்க முடியும்
கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் அவர்கள், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள்.
சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் அதை உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை வெறும் விளையாட்டாக கருதிவிடக் கூடாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. எனவே விளையாட்டை ஒரு பாடமாக நினைத்து படித்துக்கொள்ள வேண்டும்; பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.
கைப்பந்து வீரர் பி.ஜெகதீசன்
சர்வதேச கைப்பந்து வீரரும், நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கழகம் செயலாளருமான பி.ஜெகதீசன்:- சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தன் பெயரில், அவரின் தொடர் உதவியுடன் ''டாக்டர் சிவந்தி கிளப்'' என்ற பெண்களுக்கான கைப்பந்து அணி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல பெண்கள் இலவச கைப்பந்து பயிற்சி பெற்று பல மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு உள்ளனர். இவர்கள் பல அரசு துறைகளில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டு பள்ளி அளவில் உள்ள வசதியற்ற பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து புதிய பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டு அரங்கில் கைப்பந்து, கபடி மட்டுமின்றி, ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் பயிற்சி பெற்று வந்தனர். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் செல்போன் மோகம், பள்ளிகளின் தேர்ச்சி விகித எதிர்பார்ப்பாக பெரும்பாலான பள்ளிகளின் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதியின்மை. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, பெற்றோர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் இருக்கின்ற விளையாட்டு அரங்கங்களும் பயிற்சி பெற மாணவர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு போட்டிகள் நடத்துவதற்கு பல நிறுவனங்கள் உதவி செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் போட்டிகள் நடத்த முடிவதில்லை. நாம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாமல் போகிறது.
ஷைனி வில்சன்
கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை 4 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட 75 சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 80-க்கும் அதிகமான விருதுகளை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை கொண்டவரும், சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல பொதுமேலாளருமான ஷைனி வில்சன்:- மத்திய, மாநில அரசுகள் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த பள்ளி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பித்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றதுடன், சர்வதேச அளவிலும் விருதுகளையும் குவித்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகளை பயன்படுத்தி அதிகம் பேர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனை படைக்க முன்வர வேண்டும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள நான் செல்லும்போது இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் தற்போது அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகள் செய்து தருவதால் அதனை பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் மேலும் நல்ல பெயரை பெற்றுதர இன்னும் அதிகமான இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார்:- இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. போலீஸ் துறையில் 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அகில இந்திய அளவிலான போட்டி, விளையாட்டு சங்கங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றி சான்றிதழ் பெற்றால் நல்ல மதிப்பு உள்ளது. கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் இந்த போட்டிகளில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இதேபோல் என்ஜினீயரிங், மருத்துவ படிப்பிலும் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. பள்ளி அளவில் குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள், பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவதற்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கு மதிப்பெண் வழங்கப்படுவதால் என்ஜினீயரிங், மருத்துவ படிப்பிற்கு செல்வதற்கு வாய்ப்பாக உள்ளது. தற்போது செல்போன் பயன்பாடு அதிகரித்த நிலையில், குழந்தைகள் அதில் மூழ்கி விடுகின்றனர். இதனால் அதில் இருந்து அவர்களை மாற்றுவதற்காக ஏதேனும் ஒரு விளையாட்டில் குழந்தைகளை அவர்களது பெற்றோர் சேர்த்து விடுகின்றனர். இதனால் விளையாட்டரங்கத்தில் சிறுவர், சிறுமிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிவதற்காக கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விளையாட்டு மையங்களை தொடங்கி அதில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குத்துச்சண்டை போட்டி மையம் தேர்வாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்துள்ளனர். மேலும் தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பலர் தடகளம் உள்ளிட்ட போட்டிகளிலும் சாதித்து வருகின்றனர். மாநில அரசும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பளு தூக்கும் வீரர்களை ஊக்குவிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டி
தடகள பயிற்சியாளர் பவித்ரா:- விளையாட்டு துறை மீது தற்போது அனைவரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைப்பதோடு பன்னாட்டு அளவிலான போட்டிகள், ஒலிம்பிக் போட்டி, காமன்வெல்த் போட்டி உள்ளிட்டவற்றில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்று சாதிக்கின்றனர். ரெயில்வே துறை, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக இருந்தால், அவர்களை இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பவர்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்தல், பரிசு தொகைகள் வழங்குதல் உள்ளிட்டவை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்தி அதற்கேற்ப தயாரானால் சாதனை படைக்க முடியும். தடகளத்தில் மாணவிகள் பலர் சாதனை படைத்து வருகின்றனர். நான் விளையாட்டு விடுதியில் சேர்ந்து படித்தேன். 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 25 முறை தேசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். என்ஜினீயரிங், எம்.பி.ஏ. படித்து முடித்து விளையாட்டு தொடர்பான படிப்பும் முடித்துள்ளேன். தபால் துறையில் வேலைக்கு சேர்ந்து அதில் இருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டு இதில் சேர்ந்தேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைக்கும் வகையில் வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு
தங்க பதக்கம்
புதுக்கோட்டையை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மாலதி:- நான் கல்லூரியில் உடற்கல்வியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். சிறு வயதில் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வமாக இருந்தேன். அதன்பின் குத்துச்சண்டையில் ஆர்வம் ஏற்பட்டது. குத்துச்சண்டை பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வாங்கி உள்ளேன். தேசிய அளவிலான போட்டியில் 2 முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளேன். என்னை போன்று இளம்பெண்கள் பலர் குத்துச்சண்டை போட்டியில் ஆர்வமாக கலந்து கொள்கின்றனர். இந்தியாவுக்காக பதக்கங்கள் வாங்க வேண்டும் என்பது எனது இலக்கு. பல்வேறு விளையாட்டுகளில் தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் இலக்கை நிர்ணயித்து பயிற்சி பெற்று விளையாடி வருகின்றனர். இனி விளையாட்டு துறையில் அதிகம் பேர் பங்கேற்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
செல்போன்...
திருமயம் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகலட்சுமி:- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் மழை, வெயிலை பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர். அது உடலுக்கும், மனதுக்கும் வலிமையாக இருந்து வந்தது. தற்சமயம் செல்போன் வந்த பிறகு இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு செல்போன் மூலம் விளையாடுகின்றனர். மேலும், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்க்கின்றனர். இதனால் இப்போது உள்ள இளைய தலைமுறை விளையாட்டு மீது ஆர்வம் குறைந்து மனதளவிலும், உடம்பளவிலும் மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றனர். இப்படியே போய்க் கொண்டிருந்தால் விளையாட்டு என்பதை செல்போனில் மட்டும்தான் காண முடியும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்பில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு ஆர்வம் குறைகிறது
காரையூர் அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசன்:- தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித உழைப்பு வெகுவாக குறைந்து எந்திர உழைப்பு அதிகரித்துள்ளது. இது நம் இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். இளைஞர்களிடையே விளையாட்டில் இருந்த ஆர்வம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. காரணம் தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சமான செல்போன் அனைவரின் கையில் இருப்பதே காரணம். இதனால் வருங்கால இளைய தலைமுறைகள் மன நோய் மற்றும் கண் நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க விளையாட்டு என்ற உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்திய தேசிய விளையாட்டு நாள்
விளையாட்டு துறை அதிகாரிகள்:- உலகெங்கிலும் ஆக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை மேஜர் தியான்சந்த் என்பவரின் ஆக்கிதான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. இவர் தனது வாழ்க்கை முழுவதையும் விளையாட்டுக்கே அர்ப்பணம் செய்தார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக இருந்த மேஜர் தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதியை 'இந்திய தேசிய விளையாட்டு நாள்' என்று கடந்த 2012-ம் ஆண்டு முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளில் ஜனாதிபதியால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன. விளையாட்டில் இளைஞர்கள் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.