மாநகராட்சியில் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் மேயர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் நேற்று பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
சேலம்,
பகுதி சபை கூட்டம்
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட கோரிமேடு பகுதியில் பகுதி சபை மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழுத்தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கலெக்டர் கார்மேகம், பொது கணக்குக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களான காந்திராஜன், பூண்டி கே.கலைவாணன், மாரிமுத்து, ராஜமுத்து, வேல்முருகன், சதாசிவம், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
60 வார்டுகளிலும்..
கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசும் போது, உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களை போல மாநகராட்சி பகுதிகளிலும் பகுதி சபை மற்றும் வார்டு கமிட்டி கூட்டங்களை நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள பிரச்சினைகளை வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் எடுத்து கூறுவதற்கு பகுதி சபை கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாநகர நல அலுவலர் யோகானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மேயர் ராமச்சந்திரன் மற்றும் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கினார்கள்.
9-வது வார்டு
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்துக்கு வார்டு கவுன்சிலரும், கமிட்டி தலைவருமான தெய்வலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். மேலும் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் நேற்று பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டில் உள்ள பிரச்சினைகளை கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
15-வது வார்டு
சேலம் மாநகராட்சி 15-வது வார்டு பகுதியில் அஸ்தம்பட்டி மண்டலகுழு தலைவரும், வார்டு கமிட்டி தலைவருமான உமாராணி தலைமையில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்ஆர்.பார்த்திபன் எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வார்டு பகுதியில் சாலை வசதி, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்தல், மேலும் ராம்நகர், குமாரசாமிப்பட்டி ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளை சொந்த கட்டிடத்திற்கு மாற்றி அதை மேம்படுத்தி தர வேண்டும், முதியோர் உதவித்தொகை பெற்று தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பின்னர் பேசிய கமிட்டி தலைவர் உமாராணி வார்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
14-வது வார்டு
சேலம் மாநகராட்சி 14-வது வார்டில் பகுதி சபை கூட்டம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு வார்டு கமிட்டி தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வார்டு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாக்கடை கால்வாய், தார் சாலை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் கமிட்டி தலைவர் சாந்தமூர்த்தி வார்டு பகுதி மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன், வார்டு செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
38-வது வார்டு
சேலம் மாநகராட்சி 38-வது வார்டில் பகுதி சபை கூட்டம் அம்மாபேட்டை மண்டல குழு தலைவரும், வார்டு கமிட்டி தலைவருமான தனசேகர் தலைமையில் நடந்தது. இதில் கூட்டத்தில் வார்டு பகுதிகளில் சாக்கடை, சாலை வசதி அமைத்து தரவேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய கமிட்டி தலைவர் தனசேகர் வார்டு மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.