பள்ளி ஆசிரியையிடம் தாலிக்கொடி பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
முத்தூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பள்ளி ஆசிரியையிடம்
தாலிக்கொடி பறித்த வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து 1½ பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
அரசுப்பள்ளி ஆசிரியை
திருப்பூர் மாவட்டம் முத்தூர் வேப்பங்காட்டையில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி ஜீவா (வயது 43). இவர் ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி மாலை பள்ளியில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
முத்தூர் - ஈரோடு சாலை மு.வேலாயுதம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் ஆசிரியை ஜீவா அணிந்து இருந்த 4¾ பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு, ஆசிரியையை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிக்கொடியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி, ஈரோடு மாவட்டம் கொடிவேரி சாலை, சிவியார்பாளையத்தைச் சேர்ந்த கார் டிரைவர் குட்டி என்கிற வீராச்சாமியை (24) போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கோர்ட்டு உத்தரவுப்படி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.
மீன்கடை தொழிலாளி
இந்த நிலையில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கோவை மாவட்டம், ஜோதிபுரம் பாரதி நகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் (27) என்பதும், இவர் தற்போது ஈரோடு அந்தியூர் பிரிவு, சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதி பகுதியில் வசித்து கொண்டு மீன்கடை தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும், இவர் தனது கூட்டாளியான வீராச்சாமியுடன் சேர்ந்து ஆசிரியையிடம் 4¾ பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மாரீஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து 1½ பவுன் நகையை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து காங்கயம் கோர்ட்டில் மாரீஸ்வரன் மாரீஸ்வரன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாரீஸ்வரன் மீது ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 13 சங்கிலி பறிப்பு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.