ஊராட்சிமன்ற தலைவரை தாக்கிய தூய்மை பணியாளர் கைது
உடுமலை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது65).இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தினைகுளத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகனுடன் சாமிநாதன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர் சங்கிலி (57) என்பவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் பணி நேரத்தில் குடிபோதையில் ஏன் பொதுமக்களிடம் தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சங்கிலி ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதனை கெட்ட வார்த்தைகளால் திட்டியும் மதுபாட்டிலால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாட்டிலைக் காட்டி சாமிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் சங்கிலியை பிடித்து தளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் சோதனை செய்தபோது சட்டை பாக்கெட்டில் 10 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் புகார் அளித்தார். போதைப் பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலியை கைது செய்தனர்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.