மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் தங்கும் விடுதி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் அருகில் உள்ள கூனம்பட்டிபுதூரை சேர்ந்தவர் பாதிரியார் ஆண்ட்ரோஸ் (வயது 46). இவருடைய மனைவி ரேச்சல். இவர்கள் 2 பேரும் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்கள். இங்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

விடுதியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பிரார்த்தனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த விடுதியில் வீரபாண்டி பகுதியை சேர்ந்த தம்பதி தனது 14 வயது மகள், 13 வயது மகன் ஆகியோரை சேர்த்துள்ளனர். இதனால் அக்காள், தம்பி இருவரும் விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தனர்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குழந்தைகள் இருவரையும் விடுதியில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் விடுதி காப்பாளர் ஆண்ட்ரோஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஊத்துக்குளி போலீசில் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

அந்த புகாரில் விடுதிக்காப்பாளரும் பாதிரியாருமான ஆண்ட்ரோஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மாலை பிரார்த்தனைக்கு செல்லாமல் தனிமையில் இருந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

பாதிரியார் கைது

புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விடுதிக்குச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் ஆண்ட்ரோசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story