ரூ.17 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
ஈரோடு பவானி ரங்கா நகரைச்சேர்ந்த செல்வராஜ் மகன் ஜிஜேந்தர் (வயது 27), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சதீஷ்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி ஏற்கனவே அறிமுகமான ஒருவர், புதிய 500 ரூபாய் நோட்டிற்கு பழைய 500 ரூபாய் நோட்டு கொடுத்தால், ஒரு லட்சத்திற்கு 30 சதவீதம் கமிஷன் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜிஜேந்தர், சதீஷ்குமார் ஆகியோர் ரூ.17 லட்சத்தை வங்கியில் எடுத்துக்கொண்டு, சேவூர் அருகே ஆலத்தூர் அருள்நகர் விநாயகர் கோவில் அருகே வந்தவுடன் ஜிஜேந்தரை மிரட்டி காரில் இருந்து கீழே இறக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.17 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய தர்மபுரி பென்னகரத்தை சேர்ந்த முனுசாமி என்ற புறாமுனுசாமி (40), கேரளா மன்னார்காட்டை சேர்ந்த அஷ்ரப் (30), ஒசூரை சேர்ந்த சரவணன் (40) ஆகியோரை சேவூர் குட்டகம் மாதேஸ்வரன் கோவில் அருகே சேவூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.