இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்ய வேண்டும்
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட தலைவரும், மாநில இளைஞரணி செயலாளருமான வல்லபை பாலா தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் மணிஷ், பொதுச்செயலாளர் அழகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை ஆகியோர் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முகநூல், வாட்ஸ்-அப், யூ டியூப் மூலமாக கடந்த 4 நாட்களாக இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசங்களான ராமாயணத்தை பற்றி விமர்சித்ததோடு ராமன், லட்சுமணன், சீதை, அனுமான் போன்ற இந்து கடவுள்களை ஆபாசமாக பேசி வருவது தொடர்கிறது. பிரிவினையை தூண்டும் வகையிலும், மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் இந்து மதத்துக்கு எதிராக, மாற்று மதத்தை சேர்ந்த ஒருவன் பேசி வருகிறான். மத சுதந்திரம் அனைவருக்கும் சமமானது ஆகும். ஆனால் பிறர் மதத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே இந்த மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசிய நபரை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.