பெயர் பலகை வைப்பதில் தி.மு.க., பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதம்
கொடைக்கானலில் பெயர் பலகை வைப்பதில் தி.மு.க. பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பா.ஜ.க.வினர் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனை அருகே வத்தலகுண்டு சாலையில் 'செந்தாமரை' என்ற பெயரில் சுற்றுலா வழிகாட்டி சங்கம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வினர் என்பதால், அரசு மருத்துவமனை அருகே செந்தாமரை சுற்றுலா வழிகாட்டி சங்கம் என்று பெயர் பலகை வைத்தனர்.
இந்த நிலையில் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலோனோர் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் சங்கத்தின் பெயரை தி.மு.க. சுற்றுலா வழிகாட்டி சங்கம் என மாற்றினர். மேலும் அரசு மருத்துவமனை அருகே ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றிவிட்டு அதே இடத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயர் பலகையையும் வைத்தனர்.
சாலை மறியல்
இதுகுறித்து அறிந்த பா.ஜ.க.வினர் பெயர் பலகை வைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து தி.மு.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வத்தலக்குண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுலா வழிகாட்டி சங்கம் என்ற பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். புதிதாக வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதேபோல் பெயர் பலகையை அகற்ற முடியாது என்று கூறி தி.மு.க.வினரும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொடைக்கானல் போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும் புதிதாக வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட 2 பெயர் பலகைகளும் அகற்றுவது என முடிவு செய்யப்பட்டு 2 பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன. மறியல் போராட்டம் காரணமாக வத்தலக்குண்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.