மோட்டார் சைக்கிள் மோதியதால் தகராறு; வாலிபர் மீது தாக்குதல்
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், 3 பேரை போலீசார் வலை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், 3 பேரை போலீசார் வலை தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மோதியது
மயிலாடுதுறை அருகே உள்ள முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அன்பழகன் மகன் மணிகண்டன் (வயது 31). சம்பவத்தன்று மணிகண்டன் தனது சித்தி தனலட்சுமி வீட்டின் வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரை சேர்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமார் என்பவர் தனலட்சுமி மீது மோதியதாக கூறப்படுகிறது.
தகராறு
அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறின் காரணமாக அஜித்குமார் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டார். அதன் பின்னர் அஜித்குமார் தனது சகோதரர் சசிகுமார், நண்பர்களான கூறைநாடு பூக்கடைத் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் அஜித், திருவிழந்தூர் அண்ணாநகரை சேர்ந்த செல்லதுரை மகன் சந்தோஷ் ஆகிய 3 பேருடன் மீண்டும் தனலட்சுமி வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மணிகண்டன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் மணிகண்டனை செங்கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த மணிகண்டன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் போலீசில் அளித்த புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக அஜித்குமார், சசிகுமார், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.