வனத்துறையின் தொடர் கண்காணிப்பில் 'அரிக்கொம்பன்' யானை; பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் அதிகாரிகள் திணறல்


தினத்தந்தி 30 May 2023 2:30 AM IST (Updated: 30 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனை பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தேனி

வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனை பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

'அரிக்கொம்பன்' யானை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்கு ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த யானையை கடந்த 29-ந்தேதி மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் வனப்பகுதியில் விட்டனர். மேலும் அந்த யானையின் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்ைத கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே மேதகானம் வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிக்கொம்பன் காட்டு யானை, மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. அப்போது தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. அங்கு அவ்வப்போது தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

ஊருக்குள் புகுந்தது

இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி காலை 'அரிக்கொம்பன்' காட்டு யானை கம்பம் நகருக்குள் திடீரென்று புகுந்தது. அப்போது அந்த யானை வீதி, வீதியாக ஓடியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஊருக்குள் யானை புகுந்ததால், அதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். கம்பம் நகர மக்களை யானை கதிகலங்க வைத்துவிட்டது. அதே நேரத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

அரிக்கொம்பன் யானை ஊருக்குள் புகுந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நீலகிரி மாவட்டம் டாப்சிலிப், ஆனைமலை ஆகிய பகுதிகளில் இருந்து அரிசி ராஜா என்ற முத்து, சுயம்பு, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அந்த 3 யானைகள் கம்பத்தில் கட்டிப்போடப்பட்டு, தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

ஊர், ஊராக இடம்பெயரும் யானை

இதற்கிடையே கம்பத்தில் இருந்து நேற்று முன்தினம் அரிக்கொம்பன் யானை, சுருளிப்பட்டி யானைகஜம் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்து கூத்தநாச்சியாறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்குள்ள தோட்டத்தில் மாலை வரை முகாமிட்டிருந்த யானை, இரவில் ஹைவேவிஸ் மலைப்பகுதி நோக்கி சென்றது. இதனால் மீண்டும் ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு யானை சென்றடையலாம் என்று வனத்துறையினர் எண்ணியிருந்தனர். அதேபோல் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.

மாறாக அரிக்கொம்பன் யானை ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு செல்லாமல் நேற்று காலை மீண்டும் கூத்தநாச்சியாறு பகுதிக்கு வந்தது. அப்போது அருகில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வனின் தென்னந்தோப்புக்குள் புகுந்தது. அங்கு 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை நாசம் செய்தது. தொடர்ந்து காலை 9 மணி அளவில் தென்னந்தோப்பில் இருந்து நகர்ந்து காமயகவுண்டன்பட்டிக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து மதியம் ராயப்பன்பட்டி சண்முகாநதி அணைக்கு மேல்பகுதியில் உள்ள சண்முகநாதன் கோவில் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் காட்டுப்பகுதியில் யானை முகாமிட்டது. இரவு வரை அங்கேயே யானை இருந்தது.

தொடர் கண்காணிப்பு

இந்தநிலையில் ஊர், ஊராக இடம்பெயர்ந்து அரிக்கொம்பன் யானை போக்கு காட்டி வருகிறது. அந்த யானையை பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

எந்த நேரத்திலும் அந்த யானை ஊருக்குள் வரலாம் என்பதால், அதனை ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுக்க மதுரை மண்டல வன அதிகாரி பத்மாவதி, அலுவலர் ஆனந்த் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் கால்நடை மருத்துவக்குழுவினரும் உள்ளனர்.

தோட்ட பகுதிகளில் அரிக்கொம்பன் உலா வருவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் இருந்த விவசாயிகளை உடனடியாக வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். அதேபோல் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணதேவன்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story