முத்துக்குழிவயல் பகுதிக்கு சென்றது 'அரிக்கொம்பன்' யானை
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட ‘அரிக்கொம்பன்’ யானை முத்துக்குழி வயல் பகுதிக்கு சென்றது.
கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய 'அரிக்கொம்பன்' யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த யானையை நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வழியாக குமரி மாவட்டம் மேல் கோதையாறு பகுதியை கடந்து முத்துக்குழி வயல் பகுதியில் விட்டனர். மேலும், யானையின் கழுத்து பகுதியில் ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
கடந்த 17-ந் தேதி 'அரிக்கொம்பன்' யானை மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அதனை வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துைற புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மாஞ்சோலை உள்ளிட்ட பகுதியில் முகாமிட்டனர். மேலும் 'அரிக்கொம்பன்' யானையின் கண் பகுதியில் மஸ்து என்னும் மதநீர் பாதிப்பு இருந்ததால் ஆக்ேராஷசமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் யானைக்கு இந்த பாதிப்பு குறைந்தது.
ஊத்து தொழிற்சாலை, பள்ளிக்கூடம் பகுதியில் 'அரிக்கொம்பன்' யானை சுற்றித்திரிந்தது. அதனை விரட்டினால் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்துவிடும் என்பதால் வனத்துறையினர் நிதானம் காட்டினர். தொடர்ந்து அதன் நடமாட்டத்தை ரேடார் மூலம் கண்காணித்து வந்த நிலையில், குமரி மாவட்டம் மேல் கோதையாறு வனப்பகுதிக்கு 'அரிக்கொம்பன்' சென்றது.
இதுகுறித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், 'மேல் கோதையாறு பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், அந்த இதமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்த 'அரிக்கொம்பன்' யானை இரவில் முத்துக்குழி வயல் பகுதியை அடைந்தது.
தற்போது அந்த பகுதியில் தனக்கு தேவையான உணவை 'அரிக்கொம்பன்' யானை தேடி அலைகிறது. ஆனாலும் அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார். மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் நடமாடிய 'அரிக்கொம்பன்' வனப்பகுதிக்கு சென்றதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.