அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விட கோரிய வழக்கு முடித்துவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு


அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விட கோரிய வழக்கு முடித்துவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
x

அரிக்கொம்பன் யானையை கேரளாவில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து, அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கேரளாவில் இருந்து கம்பம் வனப்பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானையை பிடித்த தமிழ்நாடு வனத்துறையினர், அதை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட்டுள்ளனர். அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதால் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக்கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

சித்தரிப்பு

அதில், அரிக்கொம்பன் யானையை முரட்டுத்தனமான ரவுடி யானை என்பது போல சமூக வலைதளங்களில் இழிவாக சித்தரித்து செய்திகளை வெளியிடுகின்றனர். அவ்வாறு தகவல்களை பரப்பவும், செய்திகளை வெளியிடவும் தடைவிதிக்க வேண்டும்.

அத்துடன் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பனை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் வைத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

யானை நலம்

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீ்ஷ்குமார், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை காணொலி காட்சி மூலமாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்து நீதிபதி என்.சதீ்ஷ்குமார், சென்னை ஐகோர்ட்டில் இருந்து நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது வனத்துறை சார்பில், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பனின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரிக்கொம்பன் யானை தற்போது நலமாக உள்ளது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தலையிட முடியாது

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "அந்த யானையை எங்கு விட வேண்டும் என்று முடிவு செய்வதில் வனத்துறை அதிகாரிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள். அதில் தலையிட முடியாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். அரிக்கொம்பன் யானை குறித்து செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அதேநேரம், இந்திய பிரஸ் கவுன்சிலையும், சம்பந்தப்பட்ட ஊடகங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய வழக்கை மனுதாரர் தொடரலாம்" என்று உத்தரவிட்டனர்.


Next Story