மெலிந்த தோற்றத்துடன் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை


மெலிந்த தோற்றத்துடன் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அப்பர் கோதையாறு பகுதியில் அரிக்கொம்பன் யானை மெலிந்த தோற்றத்துடன் சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அப்பர் கோதையாறு பகுதியில் அரிக்கொம்பன் யானை மெலிந்த தோற்றத்துடன் சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரிக்கொம்பன் யானை

கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை கடந்த 20 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் லாரி மூலம் அரிக்கொம்பன் யானையை கொண்டு சென்று நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

இந்த யானை விடப்பட்ட பகுதியானது குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு மேல் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் முத்துக்குழிவயல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

நடமாட்டம் கண்காணிப்பு

அரிக்கொம்பன் யானையின் காதில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோகாலர் எனப்படும் எலக்ட்ரானிக் கருவியை பயன்படுத்தி ஜி.பி.எஸ். மூலம் வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

குமரி மாவட்ட வனத்துறை ஊழியர்களும் முத்துக்குழிவயல் பகுதியில் முகாமிட்டு அரிக்கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஆனால் அப்பர் கோதையாறு பகுதியில் எங்கும் பசுமை நிலவுவதால் அரிக்கொம்பன் யானைக்கு நல்ல உணவு கிடைக்கிறது. மேலும் அருகே குற்றியாறு அணை இருப்பதால் அங்கு சென்று தண்ணீர் குடித்தும் நன்றாக ஓய்வெடுத்து வருகிறது.

மெலிந்த உடல் தோற்றம்

தற்போது அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அரிக் கொம்பன் யானை மெலிந்து சதைப்பகுதி ஒட்டி எலும்பு பகுதி தெரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

அரிக்கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர்கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது. அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வகைகள் கிடைக்கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால்...

அரிக்கொம்பன் யானை சாப்பிடும் உணவு என்ன என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் சோதிக்கிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோஷ்ண நிலையில் இருந்து தற்போது புதிய சீதோஷ்ண நிலைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அதன் உடல் நிலையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று தான்.

அதை டாக்டர் குழுவினர் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக 6 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது. அரிக் கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போது கடல் மட்டத்தில் இருந்து 1,350 மீட்டர் மேல்பகுதியில் உள்ள அப்பர் கோதையாற்று பகுதி வனத்தில் தான் அரிக்கொம்பன் யானை உள்ளது. யானையின் உடல்நிலை 15 நாட்களுக்குள் மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story