மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு போதிய இடம் தரவில்லை


மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு போதிய இடம் தரவில்லை
x

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு போதிய இடம் தரவில்லை என்று மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு.

மதுரை


மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு போதிய இடம் தரவில்லை என்று மதுரையில் நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு.

ஜே.பி.நட்டா வருகை

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதியம் 1 மணி அளவில் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா நிர்வாகிகள் பூரண கும்பம், மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறை வல்லுனர்கள், தொழில் அதிபர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

பொருளாதார வளர்ச்சி

இந்திய நாட்டை சரியான அரசு ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது.

காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. தற்போது நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருக்கிறது.

எங்கள் கொள்கைகள் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்துறைக்கு ஆதரவானவை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் நேரம், உழைப்பு சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஜி.எஸ்.டி.க்கு முன், பின் என இரண்டாக பார்க்கலாம்.

சிறப்பாக கையாண்டார்

கொரோனாவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலையும் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. கொரோனா காலத்தை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டார். அது உலகம் முழுவதும் பரவலான பாராட்டை பெற்றது.

2 மாதத்தில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி இந்தியாவை தயாராக்கினார். மக்களுக்கு 217 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ரஷியா - உக்ரைன் போர் தொடங்கியபோது, 2 வாரத்தில் இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக நாட்டிற்கு திரும்ப கொண்டு வந்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு முந்தைய பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. மதுரையில் எய்ம்ஸ் செயல்பட தொடங்கியதும் மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பிரிவுக்காக கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கி, அதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டநிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மதுரை மல்லிகை

இதுமட்டுமின்றி, மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ரூ.732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ரூ.392 கோடி, மதுரை மல்லிக்கான ஏற்றுமதி நிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை மதுரைக்காக மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

கழிப்பறை கட்டும் திட்டத்தின் வாயிலாக நாட்டில் 11.88 கோடி குடும்பங்கள் பயனடைந்து உள்ளன. உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச கியாஸ் இணைப்பு, மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் போன்ற பல திட்டங்கள் மகளிர் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து அவர் காரைக்குடி சென்றார்.


Related Tags :
Next Story