ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற அர்ஜூன் சம்பத் கைது
ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற அர்ஜூன் சம்பத் கைது.
திண்டுக்கல்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரையை ராகுல்காந்தி நேற்று தொடங்கினார்.
இதற்கிடையே ராகுல்காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்குவதை எதிர்த்து கோபேக் இயக்கம் நடத்த போவதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்தார்.
மேலும் கோபேக் இயக்கம் நடத்துவதற்காக அர்ஜூன் சம்பத் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். இதற்காக அவர் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த ரெயில், இரவு 11.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. அப்போது திண்டுக்கல் நகர போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி, திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தை இந்து மக்கள் கட்சியினர் நேற்று காலை முற்றுகையிட்டனர்.
மேலும் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மாலை அர்ஜூன் சம்பத் விடுதலை செய்யப்பட்டார்.