திருப்பரங்குன்றம் மலையை சுற்றி குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமரா


திருப்பரங்குன்றம் மலையை சுற்றி  குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன கேமரா
x

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக மலையை சுற்றி 48 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக மலையை சுற்றி 48 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

கிரிவலப்பாதை

திருப்பரங்குன்றம் மலையானது சிவலிங்க வடிவில் சிவபெருமானே மலையாக காட்சி தருகிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் என்பது திருவிழாவாகவே நடந்துவருகிறது. ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றிவலம் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இதேபோல் பங்குனி மாதத்தில் மகாதேரானது மலையை சுற்றி வலம் வருவது தனிசிறப்பு. ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன நாளில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் பூச்சப்பரங்களில் மலையை சுற்றி வருவார். பங்குனி பெருவிழாவில் பச்சைகுதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் மலையை சுற்றி வலம் வருவார்.

கண்காணிப்பு அவசியம்

இது தவிர மலையை சுற்றி பால் சுனைகண்ட சிவபெருமான், கன்னிமார் கோவில்கள், கல்வெட்டு குகைகோவில், பஞ்சபாண்டவர் குகை, நக்கீரர்குகை என்று வரலாற்று புராணம் வாய்ந்த தலங்களும், பொழுது போக்கிற்காக எக்கோ பார்க்கும் மலையை சுற்றி அமைந்து உள்ளது. இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள்வந்து செல்கின்றனர். இதுதவிர தென்பரங்குன்றம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் உள்ளது.

சமீபத்தில் இந்த பகுதிகளில் கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தது. இதனையொட்டி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. ஆகவே இப்பகுதியில் மிகுந்த பாதுகாப்பும், கண்காணிப்பும் அவசியமாக உள்ளது.

48 கேமராக்கள்

இதனை கருத்தில் கொண்டு மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன், திருப்பரங்குன்றம் சரக மதுரை மாநகர் போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி ஆகியோர் உத்தரவின்பேரில், திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் மேற்பார்வையில் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையை சுற்றி 48 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணி முடிந்ததும் மானிட்டர் பொருத்தப்பட்டு கிரிவலப்பாதை, திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு, மற்றும் தென்பரங்குன்றம்-நிலையூர் ரோடு சந்திப்பு பகுதிகள் கண்காணிக்கப்பட உள்ளது,


Next Story