இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


இந்துக்களை கேவலமாக பேசி வரும், ராசா எம்.பி.யை பதவி நீக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டம்

இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பேசிய வரும் நீலகிரி தொகுதி ராசா எம்.பி. யை பதவி நீக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:-

ராசா எம்.பி.யை கண்டித்து நாளை (இன்று) நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் சார்பில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சியினர், இந்து முன்னணியினரை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். அங்கு ஏதாவது கலவரத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் ஊடுருவி இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. கடையடைப்பை வெற்றிக்கரமாக நடத்த வேண்டும் என்று பலர் விரும்பியுள்ளனர். உளவுத்துறை விழிப்புடன் இருக்க வேண்டும். தி.மு.க.வுக்கு முடிவுகட்ட ராசா எம்.பி. தயாராகியுள்ளார்.

தி.மு.க. காணாமல் போகும்

இந்திய நாடு வல்லரசாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். அகண்ட பாரதம் உருவாக்க வேண்டும் என்று இந்து முன்னணி சொல்லி வருவது நிறைவேறிவிடுமோ என்ற அச்சத்தில் சில அமைப்புகள் செயல்படுகிறது. தொடர்ந்து இந்து மதம், இந்து பெண்களை கேவலமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. காணாமல் போகும். பா.ஜனதா தலைமையிலான ஆன்மிக ஆட்சி நடக்கும் சூழ்நிலை நடந்து வருகிறது. இந்துக்களும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடவுள் மறுப்பாளர்கள். இவர்களை தோற்கடிக்க வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் சிறப்பாக வேலை செய்ய வேண்டும். இந்துக்களுக்கு எதிரான சக்திகளை தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story