ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட சுகாதார தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தமுறையில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, கலெக்டர் அறிவித்துள்ள குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.708 உடனே வழங்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான போனஸ் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன் வழங்க வேண்டும். 240 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் அருணாசலம், ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர் உள்பட துப்புரவு தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடியிடம் கொடுத்தனர். சம்பள உயர்வு, பணிநிரந்தரம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். போனஸ் வழங்குவது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.