சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்சந்திரகலா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கற்பகம், மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் குப்புசாமி மற்றும் திருப்பூர் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பள்ளிகளில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே நடைமுறைபடுத்த வேண்டும். அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் உதவியாளர் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சாந்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஞானசேகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மகேந்திர பூபதி, மாவட்ட இணை செயலாளர் திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.