குப்பைகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு


குப்பைகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு
x

மற்ற மாநகரங்களை போல் குப்பைகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன் பேசினார்.

திருச்சி


மற்ற மாநகரங்களை போல் குப்பைகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன் பேசினார்.

மாமன்ற கூட்டம்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் டாக்டர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்களில் சிலர் தங்கள் வார்டில் பாதாள சாக்கடை பணிகள் விடுபட்டுள்ளன என்றும், பலர் பாதாள சாக்கடை பணிகள் நீண்ட நாட்களாக நடைபெறவில்லை என்றும், பணிகள் முடிவுற்ற பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பு அந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல கவுன்சிலர்கள்,தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தூய்மைப்பணிகளை மேற்கொள்வதில் சிரமமாக இருப்பதாக குற்றம்சாட்டினர். அத்துடன், தார் சாலைகள் மற்றும் சிமெண்டு சாலைகளை அமைத்து தர வேண்டும் தெரு விளக்குகளை சீரமைத்து தர வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் தூய்மைப்பணியாளர்களுக்கு தற்போது தினக்கூலி ரூ.461 வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்கவும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து மேயர் பேசியதாவது:-

தனியார் வசம் ஒப்படைப்பு

திருச்சி மாநகராட்சி குப்பைகள் இல்லாத மாநகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, மாநகரில் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியை மற்ற மாநகராட்சிகளை போல் தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டு வருகிறோம். பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்தி டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணிகள் தொய்வாக நடக்கின்ற காரணத்தால் அந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.15 கோடி ஒப்பந்த தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும். அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து ஆகிவிடும்.

தினக்கூலி உயர்த்த அனுமதி

திருச்சி மாநகராட்சிக்கு விரைவில் செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம் செய்யவும், அரசு கால்நடை மருத்துவர், 5 அரசு மருத்துவர்கள் நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ.575 ஆக உயர்த்தி வழங்க அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story