திண்டுக்கல் மாவட்டத்தில் 1,350 இடங்களில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு


திண்டுக்கல் மாவட்டத்தில் 1,350 இடங்களில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 1,350 இடங்களில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு நடக்கிறது.

திண்டுக்கல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 1,350 இடங்களில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள், முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் ஒருசில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க இந்து அமைப்பினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் தயாரித்து கொண்டு வரப்படுகின்றன. அதேநேரம் விதிகளை கடைபிடித்து விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

1,350 இடங்களில் சிலை

இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், ஆர்.டி.ஓ.-க்கள் தலைமையில் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் ஆர்.டி.ஓ. விடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே சிலை வைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் பறிமுதல் செய்வதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள 12 இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 1,350 இடங்களில் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story