பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்
பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரமத்திவேலூர்:
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காலை கரூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இதை முன்னிட்டு நாளையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
வரவேற்பு
இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட நுழைவுவாயில் பகுதியான பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே வரவேற்பு அளிக்க நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார், பரமத்திவேலூர் காவிரி பாலம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.