தினத்தந்தி செய்தி எதிரொலி: பாழடைந்த கட்டிடத்தில் படித்த பள்ளி மாணவர்கள் மாற்று இடத்தில் கல்வி கற்க ஏற்பாடு விரைவில் புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை


தினத்தந்தி செய்தி எதிரொலி:    பாழடைந்த கட்டிடத்தில் படித்த பள்ளி மாணவர்கள் மாற்று இடத்தில் கல்வி கற்க ஏற்பாடு    விரைவில் புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:36+05:30)

தினத்தந்தி செய்தி எதிரொலியினால், பாழடைந்த கட்டிடத்தில் படித்த அரசு பள்ளி மாணவர்கள் மாற்று இடத்தில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. விரைவில் புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம்

பாழடைந்த பள்ளி கட்டிடம்

விழுப்புரம் அருகே மேலமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் 1972-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 52 ஆண்டுகளை கடந்த இப்பள்ளி கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து இப்ப விழுமோ... எப்ப விழுமோ என்ற நிலையில் அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால் மாணவ- மாணவிகள் மிகவும் ஆபத்தான சூழலில் உயிரை பணயம் வைத்து வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்று வந்தனர். மாணவர்களின் நிலை, பழுதான பள்ளி கட்டிடம் குறித்து தினத்தந்தி நாளிதழில் நேற்று புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது.

இதன் எதிரொலியாக அப்பள்ளி மாணவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

மாற்று இடத்தில் கல்வி கற்க ஏற்பாடு

இதையடுத்து நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா அப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உடனடியாக அப்பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அருகிலேயே ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்து அங்கு ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பேரில் மாணவ- மாணவிகள், அந்த வீட்டில் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு நேற்று முதல் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, இப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களிடம் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உறுதியளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இப்பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்திலேயே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் விரைவில் கட்டித்தர மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். அதுவரை பள்ளிக்கு அருகிலேயே ஒரு காலிமனையில் தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டு அதில் பள்ளி இயங்குவதற்கு கோலியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிராம மக்கள் மகிழ்ச்சி

இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். தினத்தந்தி செய்தி எதிரொலியினால் மேலமேடு கிராமத்தில் உள்ள பழுதடைந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story