பொறையாறு பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்


பொறையாறு பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல  நடவடிக்கை எடுக்கப்படும்
x

சிதம்பரம்-நாகப்பட்டினம் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் பொறையாறு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

சிதம்பரம்-நாகப்பட்டினம் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் பொறையாறு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம், பொறையாறு பஸ் நிலையம், தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் ஒழுகைமங்கலத்தில் நடைபெற்று வரும் தூய்மைப்பணி, பொறையாறில் உள்ள வளமை மீட்பு பூங்காவில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் பணிகள், வீட்டுக்கு வீடு குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது மண்புழுக்கள் உரம் தயாரித்தல் அழுகிய காய்கறிகள் மூலம் மறுசுழற்சி செய்து உரம் தயாரித்தல், கோழி இறைச்சி கழிவுகள் மூலம் உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி முறை ஆகிய பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தை பாராட்டினார்.

தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் சென்ற அவர் இ-சேவை மையம், ஆதார் சேவை மையம், வட்ட நில அளவை பிரிவு மற்றும் துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாலுகா அலுவலகம் தூய்மையான முறையில் பராமரிப்பு செய்து இருப்பதை பாராட்டினார்.

குப்பைகள் அகற்றும் பணி

ஆய்வுக்கு பின்பு கலெக்டர் மகாபாரதி கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும், கிடப்பில் உள்ள பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகம் பேரூராட்சி அலுவலகத்தின் கீழ் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்கா செயல்பாடு, தாலுகா அலுவலகத்தில் செயல்படும் பொது இ- சேவை மையம், தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கி உள்ள மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட விவரம், பொறையாறு பஸ் நிலையம் ஒழுகை மங்கலத்தில் தூய்மை பணி, பொறையாறு சந்தைவெளி தெருவில் உள்ள சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், மழை நீர் வடிகால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

பொறையாறு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை

பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிதம்பரம்- நாகப்பட்டினம் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் பொறையாறு பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால் மீது சிலாப் கொண்டு மூடப்படும். சாலையில் ஒரு சில இடங்களில் காணப்படுகின்ற மேடு பள்ளங்கள் உடனடியாக சீர் செய்து தரப்படும். திருக்கடையூர் ஆனைகுளத்திலும் பொது இடங்களிலும் பன்றிகள் வெளியில் சுற்றித்திரியாதவாறு பார்த்துக்கொள்ள உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி குமரவேல், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பேரூராட்சி துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி மண்டல துணை தாசில்தார் சதீஷ், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story