கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா, கஞ்சா விற்ற 4 பேர் கைது
பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பர்கூர் மற்றும் கந்திகுப்பம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது குட்கா விற்ற மாதையன் (வயது36), ஏ.நாகமங்கலம் பன்னீர்செல்வம் (72), பெரிய மட்டாரப்பள்ளி ராஜா (48) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்றவர் கைது
ஓசூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த ஸ்ரீராம் (21) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.