மோட்டார் சைக்கிளில் கடத்திய 10 கிலோ சந்தனக்கட்டை பறிமுதல்புதுக்கோட்டையை சேர்ந்தவர் கைது
மோட்டார் சைக்கிளில் கடத்திய 10 கிலோ சந்தனக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிளில் கடத்திய 10 கிலோ சந்தன கட்டை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், புதுக்கோட்டையை சேர்ந்தவரை கைது செய்தனர்.
ரோந்து
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் அங்கு சென்றனர். அப்போது விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். ஆனால் அவரை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு பெரிய பை இருந்தது. போலீசார் அதை திறந்து பார்த்தபோது 10 கிலோ சந்தனக்கட்டைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது.
கைது
இதை தொடர்ந்து சந்தனக்கட்டை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியை சேர்ந்த அம்ஜத் அலி (வயது 47) என்பது தெரியவந்தது. இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சந்தனக்கட்டையை கடத்தி வந்து ஓசூரில் ஒருவரிடம் கொடுத்து விட்டு மீதமிருந்த 10 கிலோ சந்தனக்கட்டையை அந்தியூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.