ஊத்தங்கரை போலீஸ் நிலைய வளாகத்தில் நின்றதனியார் பள்ளி பஸ்சுக்கு தீ வைத்த பா.ம.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது


தினத்தந்தி 22 Sept 2023 1:00 AM IST (Updated: 22 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற தனியார் பள்ளி பஸ்சுக்கு தீ வைத்த பா.ம.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை போலீஸ் நிலைய வளாகத்தில் தனியார் பள்ளி பஸ்சை தீ வைத்து எரித்ததாக பா.ம.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மகன் சதாம் உசேன் (வயது 33). ஊத்தங்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவர் கடந்த 19-ந் தேதி இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு திருப்பத்தூர்- ஊத்தங்கரை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சதாம் உசேன் பலியானார்.

பஸ் எரிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதாம் உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பஸ்சை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ வைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து, பஸ்சை எரித்த வழக்கில் ஊத்தங்கரை அவ்வை நகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (33), சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேடப்பட்டியை சேர்ந்த சூர்யா (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ம.க. இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார். விபத்தில் இறந்த சதாம் உசேன் இவர்களின் நண்பர் ஆவார். இதனால் தங்களது நண்பனின் மரணத்துக்கு காரணமான தனியார் பள்ளி பஸ்சை இவர்கள் எரித்தது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story