புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய ஆடு திருடர்கள்- ஒருவர் பிடிபட்டார்; தப்பி ஓடிய மற்றொருவருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய ஆடு திருடன் பிடிபட்டான். தப்பி ஓடிய மற்றொருவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய ஆடு திருடன் பிடிபட்டான். தப்பி ஓடிய மற்றொருவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு மிரட்டல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பொங்கியனூர் பெத்தாங்காட்டு தோட்டத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது55). இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வழக்கம்போல் கட்டியிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆடுகள் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது. இதனால் வீட்டில் இருந்த நாகராஜ் வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 பேர் ஒரு ஆட்டை தூக்கி கொண்டு ஓடினார்கள்.
இதனால் நாகராஜ் கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பொதுமக்கள் வருவதை பார்த்்ததும் அவர்கள் ஆட்டை விட்டுவிட்டு தப்பித்து ஓடினார்கள். அவர்களை பொதுமக்கள் துரத்தி சென்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்தனர். மேலும் கற்களை சரமாரியாக பொதுமக்கள் மீது வீசினர். பின்னர் ரோட்டில் நிறுத்தி இருந்த அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளில் தப்பித்து செல்ல முயன்றனர்.
ஒருவர் பிடிபட்டார்
ஆனால் ஸ்டார்ட் ஆகாததால் மோட்டார்சைக்கிளை விட்டு்விட்டு அங்கிருந்து ஓடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்றனர். இதில் ஒருவர் கீழே விழுந்தார். இதனால் அவர் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். அவருக்கு தர்ம அடி விழுந்தது. மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அங்கு சென்று பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 'அவர் திருப்பூர் மாவட்டம் கொட்டக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த குமார் (42) என்பது தெரிய வந்தது.
மற்றொருவருக்கு வலைவீச்சு
மேலும் கீழே விழுந்ததில் காயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு் செல்லப்பட்டார். மேலும் திருடர்கள் கல்வீசி தாக்கியதில் பொதுமக்களில் கந்தசாமி (50), செந்தில் (37), மனோஜ் (26) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பி ஓடிய மற்றொருவரான குள்ள துரையான் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துரத்திச்சென்ற பொதுமக்களை ஆடு திருடர்கள் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.