கேரளாவை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம்:
வழிப்பறியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அடிக்கடி வழிப்பறி
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், முகுந்தபுரம் தாலுகா வரந்தபள்ளி பகுதியை சேர்ந்த திவாகரன் மகன் உன்னி கண்ணன் (வயது 31). அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் பிஜிஸ் (39), தேவசிகுட்டி என்பவர் மகன் சிஜோன் (39). இவர்கள் 3 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் கேரளாவை சேர்ந்த மாங்காய் வியாபாரி ஷேக் முஸ்தபா என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறித்துக்கொண்டனர்.
அதே போன்று கடந்த மே மாதம் நரசோதிப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரை மிரட்டி அவரிடம் ரூ.2,300 பறித்தனர். அப்போது தடுக்க வந்த பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து மிரட்டி உள்ளனர். ஆள் கடத்தலிலும் ஈடுபட்டு உள்ளனர். எனவே அடிக்கடி வழிப்பறி மற்றும் ஆள் கடதத்தில் ஈடுபடும் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைது
அதன்பேரில் உன்னி கண்ணன், பிஜிஸ், சிஜோன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் சிறையில் உள்ள 3 பேரிடம் போலீசார் வழங்கினர்.