சேலத்தில் மனைவியை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் மனைவியை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் தகராறு செய்து விட்டு 7 மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று விட்டார். இதனால் தமிழ்ச்செல்வி, தனது சகோதரியுடன் அஸ்தம்பட்டியில் கோர்ட்டு அருகே சாலையோரம் மாம்பழம் வியாபாரம் செய்து வந்தார். பின்னர் கடந்த மாதம் மும்பையில் இருந்து மூர்த்தி சேலத்துக்கு திரும்பினார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி வழக்கம்போல், தமிழ்ச்செல்வி மாம்பழம் வியாபாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் மூர்த்தி, மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவத்தன்று பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மூர்த்தி தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு அஸ்தம்பட்டி போலீசார், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து மூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார்.