ஓமலூர் அருகே பண மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது-அம்மன் சிலைகள், மான்கொம்புகள் சிக்கியதால் பரபரப்பு
ஓமலூர் அருகே பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சாமி சிலைகள், மான்கொம்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூர்:
ஓமலூர் அருகே பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சாமி சிலைகள், மான்கொம்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி புகார்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், சாத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வில்வேந்திரன் (54) என்பவர் என்னிடம் ரூ.10 லட்சம் கடனாக வாங்கி விட்டு, அதனை திருப்பி தரவில்லை. எனவே பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்யும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதே போல காமலாபுரம் கிழக்கத்தி காடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர்் கொடுத்த மனுவில், சக்கரை செட்டிப்பட்டி, புதூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ராஜி (55) என்பவர் ரூ.25 ஆயிரம் கொடுத்தால், இரட்டிப்பு செய்து ரூ.50 ஆயிரம் தருவதாக தெரிவித்து இருந்தார். இதை நம்பி ரூ.25 ஆயிரம் கொடுத்தேன். அதனை அவர் திருப்பி தரவில்லை. எனவே பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார்.
2 பேர் கைது
அதனை தொடர்ந்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த மோசடி குறித்து ராஜி மற்றும் வில்வேந்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பணம் இரட்டிப்பு மோசடி செய்ததும், ரூ.10 லட்சம் பெற்று விட்டு மோசடி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
அம்மன் சிலைகள் பறிமுதல்
மேலும், அவர்கள் இருவரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சிறியது முதல் பெரிய அளவிலான அம்மன் சிலைகள், மான் கொம்புகள், கருப்பு வெள்ளை கிரிஸ்டல் மாலை மற்றும் சிவப்புக்கல், நீலக்கல், பச்சைக்கல், வெள்ளக்கல், திமிலங்கலம் எச்சம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த மோசடி குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.