1800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
திருமங்கலம் அருகே 1800 கிலோ ரேஷன் அரிசியை வேனில் கடத்திய ஓட்டுனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே 1800 கிலோ ரேஷன் அரிசியை வேனில் கடத்திய ஓட்டுனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீசார் தூம்பகுளம் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் முருகேசன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது விருதுநகரைச் சேர்ந்த லோடு வேன் ஒன்று சாலையில் வந்தது.
அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 45 கிலோ எடை கொண்ட 40 மூடைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் வேனை ஓட்டி வந்தவர் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த ராம்கி மற்றும் லோடு மேன்கள் வினோத், அஜித் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்து கூடக்கோவில் போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர் சுரேஷ் உடனடியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
பறிமுதல்
இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த ஓட்டுனர் உள்பட 3 பேரை கைது செய்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய வேன் மற்றும் 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.