ஈரோட்டில் பரபரப்பு சம்பவம் ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவுக்கு கடத்திய கும்பல்- ஒருவர் சிக்கினார்; 2 பேருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவுக்கு 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. இதில் ஒருவர் சிக்கினார். மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவுக்கு 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. இதில் ஒருவர் சிக்கினார். மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரில் கடத்தல்
ஈரோடு திண்டல் புதுக்காலனியை சேர்ந்தவர் மெகபூர் பாஷா (வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டு உள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். இதனால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியை பார்த்து அந்த நபர்கள் ஆட்டோவை நிறுத்த சொல்லி இருக்கிறார்கள்.
அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்த நபர்கள் திடீரென மெகபூர் பாஷாவை தாக்கினார்கள். அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் மெகபூர் பாஷாவை தூக்கிப்போட்டு அவர்கள் கடத்தி சென்றார்கள். அந்த கார் கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கைது
மாநில எல்லையான வாளையாறு சோதனை சாவடி அருகில் கார் சென்று கொண்டிருந்தது. அங்கு போலீசார் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதை அறிந்ததும் மெகபூர் பாஷாவை கடத்த முயன்ற 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதைப்பார்த்ததும் போலீசார் விரைந்து சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டநாடு பகுதியை சேர்ந்த முகமது மகன் செரீப் (வயது 29) என்பதும், பால், தயிர் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், ஈரோட்டில் இருந்து ஆட்டோ டிரைவர் மெகபூர் பாஷாவை கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றதை தெரிந்து கொண்ட போலீசார் உடனடியாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், மெகபூர் பாஷாவையும் போலீசார் மீட்டனர்.
தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற சூரம்பட்டி போலீசார் செரீப்பை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆட்டோ டிரைவர் மெகபூர் பாஷா கடத்தப்பட்டதற்கான பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
ரூ.1 லட்சம் கடன்
ஈரோடு பழையபாளையத்தில் மசாஜ் மையம் நடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இர்வான்-சோனி தம்பதியினரை மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் சவாரிக்கு அழைத்து சென்று வந்தார். இதனால் இர்வானுக்கும், மெகபூர் பாஷாவுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. இதற்கிடையே இர்வான் செலவுக்காக செரீப்பிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதில் ரூ.50 ஆயிரத்தை அவர் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் மீதமுள்ள தொகையை அவர் செலுத்தவில்லை. இதனால் இர்வானை தேடி செரீப் ஈரோட்டுக்கு வந்து உள்ளார்.
ஆனால் ஈரோடு ஓடைமேட்டில் தங்கியிருந்த இர்வான்-சோனி தம்பதி மாயமானார்கள். இதனால் மசாஜ் மையத்தில் சென்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. கடனை திருப்பி கொடுக்காமல் தம்பதி தலைமறைவாகிவிட்டதால், அவர்களை வரவழைப்பதற்காக இர்வானுடன் பழகி வந்த ஆட்டோ டிரைவர் மெகபூர் பாஷாவை கடத்தி செல்ல செரீப் திட்டமிட்டு உள்ளார். இதற்காக செரீப் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மெகபூர் பாஷாவுடன் அவரது ஆட்டோவிலேயே சவாரி செய்வது போல் நடித்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று காரில் கடத்தி சென்றது தெரியவந்து உள்ளது.
2 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து கைது செய்யப்பட்ட செரீப்பிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் ஆட்டோ டிரைவரை 3 பேர் கொண்ட கும்பல் கேரளாவுக்கு கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.