ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 3 பேர் கைது


அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

திருட்டு

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரும், இவரது மனைவி ராஜாமணியும் கடந்த 2-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் 3-ந் தேதி திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பீரோக்களில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமாசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது

மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சின்னசாமி வீட்டில் திருடிய சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33). பொன்னம்மாபேட்டையை சேர்ந்த அமீர்ஜான் (34), சாகுல் ஹமீத் (53) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் மற்றும் திருட பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பாராட்டு

திருட்டு சம்பவம் நடந்த 3 நாட்களில் திருட்டு கும்பலை கைது செய்ததோடு, தங்கநகைகள் மற்றும் பணத்தை மீட்டு கொடுத்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பாராட்டினார்.

கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது, ஏற்கனவே சேலத்தில் இரு கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. இதுமட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்தார்.


Next Story