சேலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது
பெங்களூருவில் கைதானவர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் விசாரணை
பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை நேற்று முன்தினம் இரவு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.
பின்னர் நேற்று மாலையில் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர் பற்றிய தகவல்களை போலீசாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சேலத்தில் பயங்கரவாதி கைது
இந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரது பெயர் அப்துல் அலி என்ற ஜூபா என்பதாகும். மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சேலம் சென்று அப்துல் அலியை கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.