300 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது


300 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது
x

300 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், போலீஸ்காரர்கள் இளையராஜா, சரவணபாண்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு காரை சோதனையிட்டனர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் 21 சாக்கு பைகளில் மொத்தம்300 கிலோ இருந்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து காரில் இருந்த தேவிபட்டினம் பெரியகடை தெருவை சேர்ந்த முகம்மது மன்சூர் அலிகான் (வயது22) என்பவரை பிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட கடல்அட்டைகள் மற்றும் கார் ஆகியவற்றுடன் முகம்மது மன்சூர் அலிகானை ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம் மேற்பார்வையில் வனச்சரகர் திவ்யா தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து திவ்யா கூறியதாவது:-

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் அழுகிய நிலையில் உள்ளன. இதுகுறித்து விசாரித்தபோது மீனவர்களின் வலைகளில் சிக்கும் கடல்அட்டைகளை சிறுக சிறுக வாங்கி வந்ததாக முகம்மது மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அவர் யார் மூலம் இந்த கடல் அட்டைகளை கடத்த இருந்தார்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடர்புடைய மற்றவர்களை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கூறினார்.

கைப்பற்றப்பட்ட அழுகிய கடல்அட்டைகள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டன.


Related Tags :
Next Story