பழமையான அம்மன் சிலையை விற்க முயன்ற 4 பேர் கைது


பழமையான அம்மன் சிலையை விற்க முயன்ற 4 பேர் கைது
x

300 ஆண்டுகள் பழமையான உலோக சிலையை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற 4 பேரை கைது செய்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

மதுரை

300 ஆண்டுகள் பழமையான உலோக சிலையை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற 4 பேரை கைது செய்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

300 ஆண்டுகள் பழமையான சிலை

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சாமி சிலையை சிலர் பதுக்கி வைத்து, ரூ. 2 கோடிக்கு விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை சரக கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், பாண்டியராஜன், ராஜேஷ், முலுச்சாமி, செல்வராஜ், சந்தனக்குமார் மற்றும் ஏட்டு பரமசிவன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சிலையை பதுக்கி வைத்தவர்களிடம், சிலை கடத்தல்காரர்கள் போல் பேசினார்கள். பின்னர் திருச்சி-மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை கிராடப்பட்டி ரோட்டில் அவர்கள் சிலையை கொண்டு வந்த போது, அங்கு தயாராக நின்ற தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

ரூ. 2 கோடி

சிலையை பதுக்கியவர் திருச்சி மாவட்டம் உறையூர், மேட்டுத்தெருவை சேர்ந்த முஸ்தபா (வயது 32), இதற்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டம் படுக்கப்பத்துவை சேர்ந்த ஆறுமுகராஜ் (56), குமரவேல் (32) என்பது தெரியவந்தது. அவர்களிடம் பழமையான 1 அடி உயரமுள்ள உலோக அம்மன் சிலை இருந்ததும் தெரியவந்தது.

அந்த சிலையை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கிளாமடத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அது ரூ.2 கோடிக்கு மேல் விலை போகும் என்றும், அதனை விற்று பணத்தை அனைவரும் பிரித்து கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.

4 பேர் கைது

செல்வகுமாருக்கு அந்த சிலை எப்படி கிடைத்தது? என்பது பற்றி நடத்திய விசாரணையில் அவரது தந்தை நாகராஜன் குறி சொல்லும் தொழில் செய்து வந்ததாகவும், அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு குறி சொல்ல சென்றபோது கருவாட்டு வியாபாரியின் தோப்பில் தென்னை மரத்தின் மேலே துணியில் கட்டி வைத்திருந்த அந்த சிலையை எடுத்து நாகராஜிடம் கொடுத்ததாகவும், அதை வைத்து அவர் சாமி கும்பிட்டு வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜன் இறந்து விட்டதால் அந்த சிலையை முஸ்தபாவிடம் விற்க கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பழமையான சிலையை மீட்டனர்.



Next Story