சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை-கேரள மாணவர்கள் உள்பட 3 பேர் கைது


சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை-கேரள மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2022 4:37 AM IST (Updated: 10 Aug 2022 4:38 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த கேரள மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

போதைப்பொருட்கள் விற்பனை

சேலம் மாவட்டம் வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி பகுதியை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் போதை பொருட்கள் புழக்கம் அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை பொருட்கள் விற்பனை கும்பலை பிடிக்க, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அவர்கள் ரகசியமாக அந்த பகுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களை கண்காணித்தனர். அப்போது சின்னசீரகாபாடி பகுதியில் வீடு எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து மாணவர்கள் தங்கி இருந்த ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த பிலிப் (வயது 23), அதே ஊரை சேர்ந்த அமல் (20) மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ்குமார் (22) என்பதும், அவர்களில் பிலிப், அமல் ஆகிய 2 பேரும் சேலத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு கும்பலிடம் 'மெத்தம் பேட்டமைன்' என்ற போதை பொருளை ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்துக்கு வாங்கி வந்து அதை ரூ.5 ஆயிரத்துக்கு சேலத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்துள்ளனர். அவர்கள் 3 பேரையும் ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

தனிப்படை அமைப்பு

மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கவும், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை பிடிக்கவும், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story