கணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்று புதைத்ததாக போலீசில் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
தன்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்தி வந்ததால் கணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்று புதைத்ததாக போலீசில் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்தி வந்ததால் கணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்று புதைத்ததாக போலீசில் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எரிந்த நிலையில் ஆண் பிணம்
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் பொங்குபாளையம் பகுதியில் கடந்த 24-ந்தேதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
போலீஸ் விசாரணையில், அவர் திருப்பூர் தியாகி குமரன் காலனியில் அபிராமி (வயது 24) என்ற பெண்ணுடன் வசித்து வந்த மணிகண்டன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அபிராமியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் மணிகண்டன், அபிராமியின் கள்ளக்காதலன் என்பதும், அபிராமி, அவரது கணவன் பரமசிவம் (40), தாய் பஞ்சவர்ணம் (48) ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அபிராமி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்காதல்
எங்களது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி. 2010-ம் ஆண்டு பரமசிவத்திற்கும், எனக்கும் திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பு நானும், எனது கணவரும் வேலை செய்து வந்த அட்டை கம்பெனியில் மணிகண்டனும் வேலை பார்த்து வந்தார். அந்த பழக்கத்தில் எனக்கு திருமணம் ஆன பிறகும் மணிகண்டன் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார். இதனால் எனக்கும், அவருக்கும் நெருக்கம் அதிகமானது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
இது குறித்து தெரிய வந்ததும் எனது கணவர் எங்கள் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. 2021-ம் ஆண்டு நான் வீட்டைவிட்டு வெளியேறி மணிகண்டனுடன் சென்றேன். இது குறித்து எனது கணவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் எனக்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர். ஆனாலும் என்னால் மணிகண்டனை மறக்க முடியவில்லை.
அடித்து துன்புறுத்தல்
இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நானும், மணிகண்டனும் திருப்பூர் வந்து விட்டோம். எனது 2 குழந்தைகள் மற்றும் தாய் பஞ்சவர்ணத்தையும் உடன் அழைத்து வந்து விட்ேடாம். அங்கு தியாகி குமரன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மணிகண்டனுடன் வசித்து வந்தோம். மணிகண்டன் தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தார்.
ஆனால் தினமும் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு, என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். எனது குழந்தைகளையும் கொடுமைப்படுத்தினார். இது எனக்கு நாளுக்குநாள் மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
கொன்று புதைத்தோம்
இதனால் நான் எனது கணவருக்கு கடந்த வாரம் போன் செய்து, நான் தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறுக்கு நமது குழந்தைகள் கஷ்டப்படுகின்றனர். எனவே திருப்பூர் வந்து 2 குழந்தைகளையும் அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன். இதனால் கடந்த 20-ந்தேதி சிவகாசியில் இருந்து திருப்பூர் வந்த எனது கணவர் நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்தார். அப்போது மணிகண்டன் குடிபோதையில் இருந்தார். அப்போது ஆத்திரமடைந்த எனது கணவர் மணிகண்டனை தாக்கினார். அப்போது அவர் சத்தம் போட்டதால் கத்தியால் மணிகண்டனின் தொண்டையில் எனது கணவர் குத்தினார்.
நானும், எனது தாயும் மணிகண்டனின் கை, கால்களை பிடித்துக் கொண்டோம். கத்தியால் குத்தி, கடுமையாக தாக்கியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் நாங்கள் 3 பேரும் சேர்ந்து குழி தோண்டி மணிகண்டனை புதைத்தோம். பின்னர் எனது தாயை மட்டும் வீட்டில் வைத்து விட்டு, நான், எனது கணவர், 2 குழந்தைகள் சிவகாசிக்கு சென்று விட்டோம். 2 நாட்கள் கழித்து வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக எனது தாய் கூறினார்.
பிணத்தை எரித்தார்
இதனால் எனது கணவர் சிவகாசியில் இருந்து மீண்டும் திருப்பூருக்கு வந்தார். 23-ந்தேதி இரவு வீட்டில் புதைக்கப்பட்ட மணிகண்டனின் உடலை, எனது தாய் பஞ்சவர்ணத்தின் உதவியுடன் தோண்டி எடுத்த எனது கணவர், அதை ஒரு சாக்குமூட்டையில் கட்டி, பொங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் போட்டு எரித்தார். பின்னர் எனது தாயை அழைத்துக் கொண்டு, மீண்டும் சிவகாசிக்கு வந்தார். போலீசார் துப்பு துலக்கி எங்களை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அபிராமி வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.