தலைமை ஆசிரியையை கொன்ற வழக்கில் தம்பி மனைவி-கள்ளக்காதலன் கைது
பள்ளி தலைமை ஆசிரியையை கொலை செய்த வழக்கில் அவரது தம்பியின் மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்,
பள்ளி தலைமை ஆசிரியையை கொலை செய்த வழக்கில் அவரது தம்பியின் மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தலைமை ஆசிரியை கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். ரஞ்சிதம் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் அம்பேத்கர் பாரதி கோவையில் மருத்துவ கல்லூரியில் படிக்கிறார். மகள் அபிமதிபாரதி திருமணமாகி பட்டுக்கோட்டையில் வங்கியில் பணிபுரிகிறார்.
இந்நிலையில், கடந்த 7-ந் தேதி கை, கால்களில் நரம்புகளை துண்டித்தும், வெட்டுக்காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் ரஞ்சிதம் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கள்ளக்காதல்
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் நெடுமரம் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் சூர்யா (24) என்பதும், தலைமை ஆசிரியை கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் தம்பி பாண்டிவேல்முருகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நதியா(31). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. நதியாவுக்கும், சூர்யாவிற்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்த பாண்டிவேல் முருகன், குடும்ப செலவிற்கு நதியாவிற்கு பணம் அனுப்பாமல், தனது அக்காள் ரஞ்சிதத்திற்கு பணம் அனுப்பி அவர் மூலம் நதியாவிற்கு கொடுக்க சொல்லியுள்ளார்.
2 பேர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த நதியா தனது கள்ளக்காதலன் சூர்யாவுடன் சேர்ந்து ரஞ்சிதத்தை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 6-ந் தேதி இரவு 10 மணியளவில் சூர்யா, ரஞ்சிதம் வீட்டின் பின்புறம் மறைந்திருந்தார். அப்போது அங்கு வந்த ரஞ்சிதத்தை பின்னால் இருந்து வாயைப்பொத்தி கழுத்தை நெரித்தும், கை, கால் நரம்புகளை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், ரஞ்சிதம் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகை என மொத்தம் 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்தை திருடினார். மேலும் ரஞ்சிதத்தின் போனில் உள்ள பதிவுகளை அழித்து விட்டனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கையும் திருடி சென்றுள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதனையடுத்து சூர்யாவையும், நதியாவையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 16 ஆயிரம், ஹார்டு டிஸ்க், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.