சேலத்தில் தடை செய்யப்பட்ட 540 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-4 பேர் கைது
சேலத்தில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 540 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்:
போலீசார் சோதனை
சேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகர் முழுவதும் மளிகை மற்றும் இதர கடைகளில் போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சூரமங்கலம் ஸ்டேட் வங்கி காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 49) என்பவரின் டீக்கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று சிவக்குமாரின் டீக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
540 கிலோ பறிமுதல்
அப்போது அவரது டீக்கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்ததோடு அவருக்கு புகையிலை பொருட்களை வினியோகம் செய்தவர்கள் யார்? அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அதில், கொளத்தூரை சேர்ந்த சாதிக் அலி (39) என்பவர், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து வினியோகம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாதிக்அலி, திருநகரை சேர்ந்த நசுருதீன் (46), ஓமலூர் கோட்டக்காடு பகுதியை சோ்ந்த ரசாக் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகில் பதுக்கி வைத்திருந்த 540 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சிறுவன் கைது
இதேபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக சேலம் களரம்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.