கல்லூரி மாணவர் கத்தி முனையில் கடத்தல்


கல்லூரி மாணவர் கத்தி முனையில் கடத்தல்
x

கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் அடைந்து கல்லூரி மாணவரை கத்திமுனையில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் அடைந்து கல்லூரி மாணவரை கத்திமுனையில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல்

மதுரை கோரிப்பாளையம் ஓட்டலில் கல்லூரி மாணவர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே அவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் (பொறுப்பு) ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவம் நடைபெற்ற ஓட்டல் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கல்லூரி மாணவரை மர்ம கும்பல் ஆட்டோவில் கடத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அதன்அடிப்படையில் தனிப்படை போலீசார் அழகர் கோவில் மெயின் ரோட்டில் வைத்து அந்த கும்பலை பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அலங்காநல்லூர், மேட்டுப்பட்டியை சேர்ந்த அருணன் (வயது 25) என்ற கல்லூரி மாணவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

பணம் இழப்பு

இதுகுறித்து மாணவர் அருணன் கூறும் போது, நான் கோவை கல்லூரியில் படித்தபோது கிரிப்டோ கரன்சி வணிகம் பற்றி எனக்கு தெரியவந்தது. இதில் ரூ.40 ஆயிரம் முதலீடு செய்தால், வாரந்தோறும் ரூ.2000 வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. எனவே நான் இதுதொடர்பாக சக நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தேன். அதன் பிறகு நானும் மற்றும் சிலரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தோம். பின்னர் நான் மதுரையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறேன்.

இதற்கிடையில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டதாக எனக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து கோவையில் என்னுடன் படித்த மாணவர்கள் சிலர், நீ சொன்னதால்தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தோம். எனவே நாங்கள் முதலீடு செய்த ரூ.16 லட்சத்தை நீ தான் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்தனர். எனவே நான் பணத்தை கொடுப்பதாக கூறினேன். அதனால் தான் சம்பவத்தன்று என்னை கடத்தி சென்று செல்போனை பறித்தும், பணத்தை கேட்டும் மிரட்டினார்கள் என்று கூறினார்.

3 பேர் கைது

விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுரை அழகர்கோவில் ரோடு அப்பன் திருப்பதியை சேர்ந்த அரவிந்த்குமார் (23), அவரது நண்பர்களான சென்னையை சேர்ந்த ரிஷிகுமார் (23), கார்த்திகேயன் (24) மற்றும் வக்கீலுக்கு படிக்கும் அவரது காதலி, வில்லாபுரத்தை சேர்ந்த பிரசன்னா ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அரவிந்த்குமார், ரிஷிகுமார், கார்த்திகேயன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story