அ.தி.மு.க. பிரமுகரை காரில் கடத்த முயன்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது


அ.தி.மு.க. பிரமுகரை காரில் கடத்த முயன்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது
x

திருப்பூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரை காரில் கடத்த முயன்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்


திருப்பூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரை காரில் கடத்த முயன்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அ.தி.மு.க. பிரமுகர்

திருப்பூரை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய பாசறை செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி சங்கீதா மாநகர் மாவட்ட இணை செயலாளராக உள்ளார். சந்திரசேகர் அப்பகுதியில் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளார். நேற்று மதியம் சந்திரசேகர் வீட்டில் இருந்தபோது கார்த்திகேயன் என்பவர் வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைப்பதாக கூறியுள்ளார்.

உடனே சந்திரசேகர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டுக்கு முன் நின்ற காரில் போலீஸ் சீருடையில் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். போலீஸ் கமிஷனரிடம் உன் மீது புகார் சென்றுள்ளது. வாருங்கள் போகலாம் என்று அந்த நபர் சந்திரசேகரை அழைத்துள்ளார். ஆனால் பெருமாநல்லூர் பகுதிக்கு போலீஸ் சூப்பிரண்டுக்குத்தான் புகார் செல்லும், கமிஷனர் எதற்கு அழைக்கிறார் என்று சந்திரசேகர் கேட்டுள்ளார். உடனே சந்திரசேகரை கார்த்திகேயன் வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளியுள்ளார். சத்தம் போடாமல் காருக்குள் ஏறாவிட்டால் முடித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

காரில் கடத்த முயற்சி

அப்போது காருக்குள் கணக்கம்பாளையத்தை சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் இருந்துள்ளார். சுதாரித்துக்கொண்ட சந்திரசேகர் சத்தம்போட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள ஓடி வந்து காருக்குள் இருந்த 4 பேரையும் பிடித்து பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், போலீஸ் சீருடையில் வந்தவர் சென்னை செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த அன்பழகன் (52) என்பதும், உடன் வந்தவர்கள் கணக்கம்பாளையத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ரத்தினராஜ் (33), மேகலா (34), சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பதும் தெரியவந்தது. இதில் ரத்தினராஜூக்கும், சந்திரசேகருக்கும் இடையே ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த 1½ வருடங்களுக்கு முன் பேசி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எதற்காக காரில் கடத்த முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அன்பழகன் சென்னை தலைமை செயலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். ரத்தினராஜின் நண்பர் கார்த்திகேயன், அன்பழகனை திருப்பூர் அழைத்து வந்தது தெரியவந்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

இதைத்தொடர்ந்து ரத்தினராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், கார்த்திகேயன், மேகலா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க. பிரமுகரை காரில் கடத்த முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story